search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கு"

    இந்து முன்னணி பிரமுகர் கொலை தொடர்பாக என்.ஐ.ஏ. போலீஸ் சூப்பிரண்டு ராகுல் தலைமையில் அதிகாரிகள் ஷாஜகானின் வீடு மற்றும் மர அறுவை ஆலையில் தனித்தனியாக அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். #HinduMunnani #Sasikumar
    கோவை:

    கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார்(வயது 38) கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந் தேதி கொலை செய்யப்பட்டார்.

    சி.பி.சி.ஐ.டி. யின் சிறப்பு புலனாய்வு பிரிவினர் இந்த வழக்கை விசாரித்தனர். இதில் கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த முபாரக் (35), ரத்தினபுரியை சேர்ந்த சதாம்உசேன்(27) ஆகியோருக்கு முக்கிய தொடர்பு இருப்பதை போலீசார் கண்டு பிடித்தனர்.

    இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சதாம் உசேன் (27) கைது செய்யப்பட்டார். பின்னர் அக்டோபர் மாதம் உக்கடம் ஜி.எம். நகரை சேர்ந்த சுபைர்(33) கைது செய்யப்பட்டார். தொடர்ந்து நடந்த விசாரணையில் 15 மாதங்களுக்கு பிறகு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முபாரக்கை(37) கைது செய்தனர். இந்த வழக்கில் உடந்தையாக இருந்ததாக போத்தனூரை சேர்ந்த அபு தாகீர்(32) என்பவரும் கைது செய்யப்பட்டார்.

    கைதானவர்களிடம் விசாரணை நடத்திய போது கோவை கணபதியில் ஹக்கீம் என்ற பெயிண்டர் கொலைக்கு பழிக்கு பழியாக சசிகுமாரை கொன்றதாக வாக்குமூலம் அளித்தனர். கைதானவர்கள் தலைமறைவாக இருந்தபோது அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் யார்- யார்? என விசாரணை நடத்தினர்.

    இதில் இந்த வழக்கின் பின்னணயில் வேறு நபர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகித்தனர். இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் மத்திய உள்துறை உத்தரவின்பேரில் இவ்வழக்கு தேசிய புலனாய்வு பிரிவுக்கு(என்.ஐ.ஏ.) மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ. போலீஸ் சூப்பிரண்டு எல்.ஆர். குமார் தலைமையிலான அதிகாரிகள் கோவையில் முகாமிட்டு விசாரணை நடத்தி வந்தனர்.

    இவ்வழக்கில் கைதான முபாரக் உள்பட 4 பேரின் வீடுகளில் கடந்த மார்ச் மாதம் 18-ந் தேதி என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது வீடுகளில் இருந்து செல்போன்கள், பாக்கெட் டைரி, மெமரி கார்டுகள், ரசீதுகள், அடையாள அட்டைகள் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.

    இதுதொடர்பாக குறிப்பிட்ட அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பி என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் மே மாதம் செல்வபுரத்தை சேர்ந்த என்ஜினீயர் பெபின் ரகுமான், உக்கடத்தை சேர்ந்த அனீஷ், குனியமுத்தூரை சேர்ந்த ஹைதர் அலி, துடிய லூரை சேர்ந்த சதாம்உசேன், வெள்ளக்கிணறு பகுதியை சேர்ந்த முகமது அலி ஆகியோரது வீடுகளிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் லேப்டாப், டைரி, சி.டி.க்கள், செல்போன்கள், ஆகியவற்றை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் மூளையாக செயல்பட்ட முபாரக்கை 10 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது ஏராளமான முக்கிய தகவல்கள் என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு கிடைத்ததாக கூறப்பட்டது.

    இந்தநிலையில் இன்று சாய்பாபா காலனியை சேர்ந்த ஷாஜகான் என்பவரது வீட்டில் திடீரென என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். இவர் துடியலூரில் மர அறுவை ஆலை நடத்தி வருகிறார்.

    என்.ஐ.ஏ. போலீஸ் சூப்பிரண்டு ராகுல் தலைமையில் அதிகாரிகள் 2 குழுவாக பிரிந்து ஷாஜகானின் வீடு மற்றும் மர அறுவை ஆலையில் தனித்தனியாக அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதையொட்டி அப்பகுதியில் கோவை மாநகர போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    ஷாஜகான் வீட்டில் நடந்து வரும் சோதனை குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் கூறியதாவது:-

    ஷாஜகானின் வீட்டில் மத வழிபாடு வகுப்புகள் நடந்து வந்தது. இதுதொடர்பாக கூடுதல் தகவல்கள் திரட்டுவதற்காக இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்து முன்னணி பிரமுகர் கொலையில் கைதானவர்களுக்கு ஷாஜகான் உதவி செய்தாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #HinduMunnani #Sasikumar

    ×